இலங்கை முஸ்லிம்களை தனித்துவ அரசியலுக்கு இட்டுச்சென்றசில நகர்வுகள்...


(இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். எம். ஸுஹைருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை)

இலங்கையில் முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டு பெரும்பான்மை சமூகங்களுடன் இணைந்து தான் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.அதுவும் தம் சமய, கலாசார அடையாளங்களைப் பேணிக்காத்தபடியே செயற்பட்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இதேநிலை தான், இந்நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் 1980 கள் வரைத் தொடர்ந்தது. அது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ஜே. ஆர் ஜயவர்தன ஆறில் ஐந்து பெரும்பான்மை வாக்கு பலத்தில் ஆட்சி அமைத்தது முதல், 1987 வரையும் காணப்பட்ட அரசியல் நிலைமை.
அதேநேரம் இந்நாட்டு முஸ்லிம்கள் ,நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் எல். ரி. ரி. ஈ. இன் அரசியல் பிரவேசம் வரையும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிலும் தான் அங்கம் வகித்து அக்கட்சிகளுக்கு ஆதரவும் நல்கி வந்தனர். அக்கட்சிகளில் தான் தம் மக்கள் பிரதிநிதிகளையும் தெரிவு செய்து கொண்டனர். அதிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் பெரும்பாலான முஸ்லிம்கள் அங்கம் வகித்தனர். அதனால் முஸ்லிம்கள் தங்களுக்கென தனித்துவமான அரசியல் கட்சியின் தேவை குறித்து சிறிதளவேனும் சிந்தித்து பார்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
என்றாலும் 1982ஆம் ஆண்டில் மொரட்டுவவில் நடைபெற்ற ஒரு கூட்டமொன்றில் உரையாற்றிய அன்றைய ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் வர்த்தக கப்பல் போக்குவரத்து அமைச்சர் லலித் அத்துலத்முதலி “முதலில் தமிழர்களுக்கும் அடுத்து முஸ்லிம்களுக்கும் அதற்கடுத்தபடியாக கிரிஸ்தவர்களுக்கும் பாடம் புகட்டும் திட்டம் குறித்து அறியக் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும்” பகிரங்கமாகக் குறிப்பிட்டார். ஆனால் அத்திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இருந்தும் இந்த உரையின் தாற்பரியத்தையோ அதன் பாரதூரத்தையோ தமிழ் மக்களோ, முஸ்லிம்களோ உடனடியாக உணர்ந்து கொள்ளவில்லை.
ஆனால் இவ்வுரை நிகழ்த்தப்பட்டு ஒரு வருடம் செல்வதற்குள் 1983 இல் தமிழ் மக்களுக்கு எதிராக ஜுலைக் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இக்கலவரத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்டார்கள், அவர்களது சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. எரித்து சாம்பலாக்கப்பட்டன.
இருந்தும் இக்கலவரம் ஏற்பட்டு நான்கு நாட்கள் கடந்தும் கூட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வன்முறைகளைக் கட்டுபடுத்தவோ, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ எதுவித நடவடிக்கையையும் எடுக்காது எதையும் அறியாதவர் போன்று மௌனியாக இருந்தார். அதனால் இக்கலவரத்தின் பின்னணியில் ஜே. ஆர். ஜயவர்தன செயற்பட்டுள்ளார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது.
என்றாலும் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், மற்றும் ஆட்சியாளர்களின் நகர்வுகளை அவதானித்து வந்த அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி நான்காவது நாள் ஜே. ஆர். ஜயவர்தனவைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு,“தற்போது இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமது வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ்வை நாளை கொழும்புக்கு அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து தான் ஜே.ஆர். ஜயவர்தன தன் மெளனத்தைக் கலைத்தார் .அதேதினம் மாலையில் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, “நான் நாட்டை பிளவுபட இடமளிக்கமாட்டேன். அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட வேண்'டாமெனவும் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் இந்திராகாந்தி குறிப்பிட்டபடி வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ் மறுநாள் கொழும்பை வந்தடைந்தார். அவர் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஜே. ஆருடனும் அவரது அரசாங்க முக்கியஸ்தர்களோடும் விரிவாகக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் அழுத்தம் இலங்கை மீது தொடர்ந்த வண்ணமிருந்தன.
இந்தப் பின்புலத்தில் தான் ஜே. ஆர். ஜயவர்தன 1984 இல் அனைத்து கட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அரசியல் சூழலில் அப்போதைய முஸ்லிம் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தொழில் சங்கத் தலைவர் ஏ. அஸீஸ் அப்போதைய முஸ்லிம் தலைவர்களையும் சமூக முக்கியஸ்தர்களையும் பம்பலப்பிட்டி லெயாட்ஸ் வீதியிலுள்ள தமது வீட்டுக்கு அழைத்து அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் உரை தொடர்பில் கலந்துரையாடியதோடு தமிழ் மக்களுக்கு போன்ற ஒரு நிலை முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடாது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த அனைத்து கட்சி மாநாட்டை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் அக்கூட்டத்தில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது.
தொழில் சங்கத் தலைவர் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சேர் ராசிக் பரீட், டொக்டர் எம். சி. எம் கலீல், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், அப்துல் டப்ளனியூ. எம். அமீர், எம். எல். எம். அபூசாலி, மூதூர் அப்துல் மஜீட், எம். எச். எம். அஷ்ரஃப், எம். எம். ஸுஹைர், செனேட்டர் மஸுர் மௌலானா, தேசமான்ய கலாநிதி ஏ. எம். எம். சஹாப்தீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது தான் முஸ்லிம்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நலன்கள் தொடர்பில் பணியாற்றும் நோக்கில் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கென தனியான அரசியல்கட்சி எதுவும் இருக்கவில்லை. மர்ஹும் எம். எச். எம். அஷ்ரஃப்பும் கூட முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பில் இக்கவுன்ஸில் ஊடாக அதிக அக்கரையோடு பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அது.
இக்காலப்பகுதியில் எம். எச். முஹம்மத், ஏ. சி. எஸ். ஹமீட் ஆகிய இருவரும் அமைச்சரவை அமைச்சர்களாகவும், எம். எல். எம். அபூசாலி, எம். ஈ. எச். மஹ்ரூப், ஏ. ஆர் மன்ஸுர் ஆகியோர் மாவட்ட அமைச்சர்களாகவும், எம். எச். எம். நைனா மரிக்கார், எம். ஏ. அப்துல் மஜீட் ஆகியோர் பிரதியமைச்சர்களாகவும் ஜே. ஆரின் அரசாங்கத்தில் பதவி வகித்துக் கொண்டிருந்தனர்..
இவை இவ்வாறிருக்க, இற்றைவரையும் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கு தனித்துவ அரசியல் அங்கீகாரம் இருந்து வந்தபோதிலும் முஸ்லிம்களுக்கு அவ்வாறான அங்கீகாரம் இருக்கவில்லை.எனினும்அன்றைய முஸ்லிம் தலைவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் இக்கவுன்ஸில் ஊடாக ஒன்றுபட்டதன் பயனாக இக்குறைபாடு ஓரளவுக்கு நீங்கியது.முஸ்லிம்களின் தனித்துவமும் முதல் தடவையாக 1984இல் கூடிய சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட.து.
ஜே.ஆர் ஜயவர்தன கூட்டிய இச்சர்வகட்சிக் கூட்டம் பண்டாராநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அவரது தலைமையில்1984 இல் பலமுறை கூடியது. இக்கூட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், டெலோ உள்ளிட்ட எல்லா தமிழ் கட்சிகளும் கலந்து கொண்டன. ஆனால் புலிகள் இயக்கத்தினர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் அப்போது அவ்வளவு பெரிதாக வளர்ச்சி அடைந்திருக்கவுமில்லை. ஜனநாயக நீரோட்டத்தில் பிரவேசித்திருக்கவும் இல்லை.
இச்சர்வகட்சி மாநாட்டில் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ்அமைப்பு பிரதிநிதிகள் சேர் ராசிக் பரீத் தலைமையில் கலந்து கொண்டனர். இந்த சர்வகட்சி கூட்டம் தொடர்பில் அப்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் இளைஞர்களான எம். எச். எம். அஷ்ரஃப், எம். எம். ஸுஹைர், தேசமான்ய கலாநிதி சஹாப்தீன் போன்றோர் நம்பிக்கையோடும் அதிக அக்கரையோடும் செயற்பட்டு வந்தனர். அச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க. என்ற பேதம் பாராது முஸ்லிம்களின் நலன்களுக்காக ஒன்றுபட்டு செயற்பட்டனர்.
இந்த சர்வகட்சி கூட்ட அமர்வுகளில் கலந்து கொண்டகவுன்ஸில் பிரதிநிதிகள், தமிழ் மக்களுக்கு போன்ற ஒரு நிலை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட இடமளிக்கக் கூடாது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அரசாங்க சேவை, வெளிவிவகார சேவை, கல்வி சேவை, நிர்வாக சேவை என்பவற்றிலும் முஸ்லிம் பிரநிதித்துவம் இல்லாதுள்ளது. இந்த நிலைமை இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று அம்மாநாட்டின் போது சுட்டிக்காட்டப்பட்டது. அவை மாத்திரமல்லாமல் பொலிஸ்சேவை உள்ளிட்ட முப்படைகளிலும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்தும் இல்லாதுள்ளது. அதனால் இந்தியாவில் சீக்கியர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது போன்ற தனியானபடை பிரிவை இங்கும் உருவாக்கலாம். இவ்வாறான (ஜுலைக் கலவரம் போன்ற) சந்தர்ப்பங்களில் அவை பயன்மிக்கதாக இருக்கும் என்றவாறான கருத்துக்களும் முஸ்லிம் தரப்பினால் முன்வைக்கப்பட்டன. 
எனினும் முஸ்லிம்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஒரு அணியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் ஜே.ஆரின் பார்வை வேறுவிதமாகவே இருந்தது. அவரது பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்தின. அதாவது முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழ் தலைமைகளோடு ஒன்றாக இச்சர்வகட்சி கூட்டத்தில் கலந்'து கொள்வார்கள் என்றே அவர் எதிர்பார்த்திருக்கலாம். அதனை அவர் வெளிப்'படையாகக் கூறவில்லை. என்றாலும் முஸ்லிம்களுக்கு பிரத்தியேக அந்தஸ்தை வழங்க முன்வந்தமைக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என கவுன்சில் வட்டாரங்களில் அன்று ஊகிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் பின்னர் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்பு ஊடாகக் கலந்து கொள்வதற்கு டொக்டர் எம்.சி.எம். கலீல் திடீரென வருகை தரவில்லை. இது கவுன்ஸில் பிரதிநிதிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. ஆனாலும் கவுன்ஸில் பிரதிநிதிகள் திட்டமிட்டபடி கூட்டத்தில் கலந்து கொள்'ளவென சர்வகட்சி மாநாட்டு அறைக்கு சென்றனர். அங்கு டொக்டர் எம். சி. எம். கலீல், பரிஸ்டர் ஹாசிம் உள்ளிட்டோர் ஐ.தே.க தரப்புடன் தனியான மேசைகளில் அமர்ந்திருந்தனர். அப்போது கவுன்ஸில் பிரதிநிதிகள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டனர். அது தான் முஸ்லிம்கள் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபடுவதை ஜே. ஆர் ஜயவர்'தன விரும்பவில்லை என்பதே அதுவாகும். அதுவும் இந்நாட்டு முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் ஐ.தே.க.வுக்கு வாக்களித்த போதும் கூட முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்பது அப்போதே தெளிவாகியது.
சர்வகட்சிக் கூட்டத்தில் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்புடன் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு முதலில் கலந்து கொண்ட டொக்டர் கலீலுக்கு என்ன நடந்தது என்பதற்கான காரணம் பின்நாளில் வெளிப்பட்டது. அது தான், “முஸ்லிம் லீக் எம்முடன் உள்ள அமைப்பு. நீங்கள் எம்முடனேயே இருங்கள். தனித்து செல்லத் தேவையில்லை“ என்று டொக்டர் கலீல் உள்ளிட்டோரிடம் ஜே. ஆர் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்பவே அவர்கள் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்புடன் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் தமது இச்செயற்பாட்டின் பின் விளைவையும், அதனால் சமூகம் எதிர்கொள்ளவிருக்கும் பாதிப்பு மற்றும் இழப்புக்களையும் அவர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவை தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தவும் இல்லை.
எனினும் சொற்ப காலத்தில் சர்வகட்சி கூட்டத்தை நிறுத்திய ஜே. ஆர் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார். இந்த அறிவிப்பின் ஊடாக சர்வகட்சி மாநாட்டில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்பின் பிரதிநிதிகள் அரசியல் கட்சி இல்லாத நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றனர். கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் ஒரு அமைப்பே அன்றி அரசியல் கட்சியல்ல. அதனால் ஜே.ஆர் ஏற்பாடு செய்'த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் முஸ்லிம்கள் தனியொரு தரப்பாகக் கலந்து கொள்ளுவதற்கான வாய்ப்பு திட்டமிட்ட அடிப்படையில் தவிர்க்கப்பட்டன எனக் கூறலாம்.
அதேநேரம் 1980 களில் துரித வளர்ச்சிகண்ட எல். ரி. ரி. ஈ. இன் எழுச்சி முஸ்லிம்களின் அரசியல் நிலைமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியதும் மறைக்க முடியாத உண்மையாகும்.
ஆனால் இந்நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான அரசியல் கட்சியொன்றை அமைக்கவுமில்லை. அதற்கான எண்ணமும் அவர்களிடம் தோன்றவுமில்லை. அவர்கள் சுதந்திரம் பெற்றது முதல் 1986 வரையும் ஐ.தே.க.விலும், ஸ்ரீ.ல.சு.கவிலும் தான் அங்கம் வகித்தனர். அக்கட்சிகளுக்கு ஆதரவு நல்கினர். அக்கட்சிகளிலேயே அரசியல் பிரதிநித்துவத்தையும் பெற்றுக்கொண்டனர். அதிலும் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் ஐ.தே.கவுக்கே ஆதரவு, நல்கி வந்தனர்.
இவ்வாறான பின்புலத்தில் தான் எம். எச். எம். அஷ்ரஃப் முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் கட்சியை அமைப்பது குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அந்தடிப்படையில் தான் 1986 இல் இந்நாட்டு முஸ்லிம்களின் முதலாவது அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெமட்டகொட வீதியிலுள்ள பாஷா விலா மண்டபத்தில் வைத்து பிரகடனப்பட்டுத்தப்பட்டது. இருந்த போதிலும் மு.கா. அரசியல் கட்சியாகப் பதியப்படுவதற்கு இரு வருட காலம் எடுத்தது. இதற்கிடையில் நடக்க வேண்டிய எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
அதுதான் இந்தியாவின் கடும் அழுதத்தைத் தொடர்ந்து 1987 ஜூலை 29 ஆம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் ஊடாக முஸ்லிம்கள் சனத்தொகையில் முன்னணி சமூகமாகத் திகழ்ந்த கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்களிடம் எதுவித கருத்தும் அறியப்படவில்லை. இந்நடவடிக்கையின் ஊடாக பெரும்பான்மை அரசியல் கட்சிகள் ஊடாக சிங்கள அரசியல் தலைமைகளின் தயவில் வாழ்ந்த முஸ்லிம்களைத் தமிழ் தலைமைகளிடம் செல்லுமாறு அன்றைய ஜே.ஆர். அரசாங்கம், இந்தியாவின் பங்களிப்பின் ஊடாக நிர்ப்பந்தித்தது.
இது ஒரு புறமிருக்க எல். ரி. ரி. ஈ. இனர் 1983 களின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வளர்ச்சியடையத் தொடங்கினர். அவர்கள். முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் இளைஞர்களாகப் பொறுப்பாளர்களாகவும் நியமித்தனர். இதனூடதாக முஸ்லிம் அரசியல் தலைமையைப் பலவீனப்படுத்தவே அவர்கள் முயற்சி செய்தனர். அதேநேரம் வடகிழக்கு முஸ்லிம்களை அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு திருகோணமலையில் வரதராஜப்பெருமாள் தலைமையில் இயங்கிய தமிழ். தலைமைகளிடம் செல்லுமாறு ஜே. ஆர், ராஜிவ் ஒப்ப்ந்தம் நிர்ப்பந்தித்தது. ஆனாலும் கவுன்ஸில் ஒப் முஸ்லிம் தலைமைகள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தனர் .இந்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் தான் வடக்கு கிழக்கில் வாழுகின்றனர். ஆனால் மூன்றிலிரண்டு பங்கு முஸ்லிம்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ளனர். அதனால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்காக எடுக்கும் தீர்மானத்தினால் வடக்கு கிழக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக் கூடாது. அதேபோன்று வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் நலன்களுக்காக எடுக்கும் தீர்மானம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பாதிக்க இடமளிக்க முடியாது என்ற அடிப்படையில் தூர நோக்கோடு சிந்தித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்தனர். அதுவே வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்ப்பதும் இல்லை. அதனை ஆதரிப்பதும் இல்லை“ என்ற முடிவாகும். கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்பு இவ்வாறான தூர நோக்கு மிக்க ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், அப்துல் அஸீஸ், எஸ். இஸட். எம். மர்ஸுர் மௌலானா, எம். எச். எம். அஷ்ரஃப், எம். எம். ஸுஹைர், கலாநிதி சஹாப்தீன் போன்றோர் முக்கிய பங்காற்றினர்.
இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டமை, அதனால் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கவுன்ஸில் பிரதிநிதிகள் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் மற்றும் டொக்டர் எம். சி. எம். கலீல் ஆகியோர் தலைமையில் ஜே. ஆர். ஜயவர்தனவை ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர். இப்பேச்சுவார்த்தையில் டொக்டர் கலீல், கலாநிதி பதியுத்தீன், ஏ. அஸீஸ், மஸுர் மௌலானா,,அஷ்ரஃப், ஸுஹைர், சஹாப்தீன் உட்பட சுமார் 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கு இணைப்பு அதனைத் தொடர்ந்து முஸலிம்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் தொடர்பில் கவுன்ஸில் பிரதிநிதிகள் ஜே. ஆருக்கு விரிவாக எடுத்துக் கூறியதோடு இற்றைவரையும் பெரும்பான்மை கட்சிகளை நம்பி இருந்து வந்த முஸ்லிம்கள் இப்போது கைவிடப்பட்டு விட்டதாக ஆணித்தரமாக எடுத்துக் கூறினர்.
இந்தசந்தர்ப்பத்தில் கவுன்ஸில்ஸ் ஒப் முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வைத்த வேதனைகளையும் ஆதங்கங்களையும் புரிந்துகொண்ட ஜே. ஆர் இப்போது எல்லாமே முடிந்திருக்கின்றது. ஜுலையில் இலங்கை –இந்திய உடன்படிக்கை கைச்சார்த்திடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அப்படியென்றால் தமிழ் தலைவர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். உங்களது ஆதங்கங்கள் குறித்து அவர்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வாருங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை“ என்று குறிப்பிட்டார்.
அந்தசந்திப்பும் முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளை நம்பி வந்ததன் விளைவை எடுத்துக்கூறியது. அத்தோடு தங்களுக்கென ஒரு அரசியல்கட்சி இல்லாமையின் விளைவையும் அன்றும் முஸ்லிம்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இருந்தும் எல்லாமே முடிந்திருந்தது.
ஆனபோதிலும் ஜே.ஆரின் நிலைமை தெளிவானதைத் தொடர்ந்து கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் பிரதிநிதிகள் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் சென்னைக்கு தூதுக்குழுவாகச் சென்றனர். தூதுக்குழுவின் தலைவராக கலாநிதி பதியுத்தீனும், செயலாளராக ஸுஹைரும் பணியாற்றியதோடு இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் எம். எம். முஸ்தபா, மூதூர் மஜீத், தேசமான்ய சஹாப்தீன் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாகும் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் தொடர்பில் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான அடித்தளத்தையும், ஆரம்பத்தையும் இங்குதான் தொடங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
கவுன்ஸில் பிரதிநிதிகள் சென்னையில் அப்போது தங்கி இருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி, புளொட், ரெலோ உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், புலிகள் இயக்கத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர். அப்பேச்சுவார்த்தையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான இரா சம்பந்தன் த.வி.கூ தரப்பில் கலந்துகொண்டிருந்தார்.
இப்பேச்சுவார்த்தையின் போது,“தற்போது வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக உள்ளனர்.. எமது சமய, கலாசார விழுமியங்கள் தனித்துவமானது. அத்தோடு சமய, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புக்களும் வித்தியாசமானவை. அதனால் முஸ்லிம்களை தனியொரு அரசியல் இனமாக செயலாற்ற வேண்டிய நிலைமை உள்ளது. எமது பிரதேசங்களில் பணியாற்றும் போது பள்ளிவாசல்களுடனும், அக்கிராமங்களின் முக்கிய அமைப்புகளுடனும் கலந்துரையாடப்படுவது முக்கியம். என்றெல்லாம் எடுத்துக்கூறி முஸ்லிம்களை தனி அரசியல் இனமாக ஏற்றுக்கொள்வதற்கான நியாயமான காரணங்களை முஸ்லிம் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
இவை அனைத்தையும் கேட்டறிந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் முஸ்லிம்களின் இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை .இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த இரா.சம்பந்தன் “இணந்த வட கிழக்கில் கலாசார உரிமைகளைத் தவிர முஸ்லிம்களின் பிரத்தியேக அரசியல் உரிமைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாமியத் தமிழர்கள் .என்ற அடிப்படையில் எம்முடன் இணைந்து செயற்படுங்கள்“ என்று குறிப்பிட்டார்.
இரா. சம்பந்தனின் இக்கூற்று கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு பெரும் ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற இந்நிலைப்பாடும் பின்நாளில் முஸ்லிம் காங்கிரஸ் உருவாவதற்குரிய இன்னொரு காரணமாக அமைந்த்தும் உண்மையான அண்மைக்கால வரலாறாகும். தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியால் தமிழைப் பேசுபவர்கள். காலாகாலமாக பிட்டும் தேங்காய்ப் பூவும் போன்று ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். இந்நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தமிழரசுகட்சி உருவான காலம் தொட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களில் சிலர் தமிழரசு கட்சியில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். அக்கட்சிக்கு ஆதரவு நல்கியுள்ளனர். தேர்தல்களில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். எம். எச். எம். அஷ்ரஃப், செனேட்டர் மஸுர் மௌலானா, காத்தான்குடி ஏ. அஹமட் லெப்பை, டொக்டர் உதுமாலெப்பை போன்ற பல முஸ்லிம் தலைவர்கள் தமிழரசுக்கட்சி 1956 முதல் முன்னெடுத்த சாத்வீகப் போராட்டங்களில் பங்கு பற்றியுள்ளனர்.. தமிழரசுக் கட்சியின் தேர்தல் மேடைகளையும் அலங்கரித்துள்ளனர்.1956 இல் எஸ். ஜே. வி செல்வநாயகம் பண்டாநாயக்காவுடன் மேற்கொண்ட பண்டா –செல்வா உடன்படிக்கையில் கூட அவர் முஸ்லிம்களை மறந்து செயற்படவில்லை.
ஆகவே தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் தமது கோரிக்கையில் நியாயம் கண்டு அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு தான் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்பு சென்னை சென்று தமிழ் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. இந்நாட்டு வரலாற்றில் தமிழ் தலைவர்களுக்கும் முஸ்லிம் சமூகத் தலைமைகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது அரசியல் பேச்சுவார்த்தை இது. அதாவது இந்நாட்டின் இரண்டாவது சிறுபான்மை சமூகமாக விளங்கும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளுடன் மூன்றாவது சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் சமூகத்தலைமைகள் முஸ்லிம்களை தனித்துவமான அரசியல் சமூகமாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரி நடாத்திய பேச்சுவார்த்தை தான் இது.
இருந்தும் இப்பேச்சுவார்த்தையில் த.வி.கூ. சார்பில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன் முஸ்லிம் தரப்பின் இக்கோரிக்கையை நிராகரித்தமை தமிழ் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இடம்பிடித்திருக்கின்றது. அதனால் இப்பேச்சுவார்த்தை முஸ்லிம்களுக்கு தோல்வியைக் கொடுத்ததோடு கவுன்ஸில் பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பினர். என்றாலும் அவர்கள் முஸ்லிம்களின் அரசியல் மேம்பாட்டுக்கான பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றனர். இவை இன்றும் பகிரங்கப்படுத்தப்படாத உண்மைகளாகவே உள்ளன.


(படக்குறிப்பு) வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் எதிர்கால நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் கவுன்ஸில் ஒப் முஸ்லிம்ஸ் அமைப்பினர் சென்னைக்கு சென்றிருந்த போது பிடிக்கப்பட்ட படம். சென்னை விமான நிலையத்தில் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், முன்னாள் ஒலிபரப்பு துறை பிரதியமைச்சர் ஏ. எல். எம். அப்துல் மஜீத் எம். பி, முன்னாள் நீதியமைச்சர் எம். எம். முஸ்தபா, சேர் அப்துல் டப்ளியூ. எம். அமீர், சட்டத்தணி எம். எம். ஸுஹைர், கலாநிதி சஹாப்தீன், சட்டத்தரணி ஸம்ஸம் அக்பர் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் படத்தில் காணலாம்.

@இப்னு மரைக்கார்
 
© Muslim Vanoli '2016 All Rights Reserved' 24 Hours Tamil online Islamic Radio Station.